சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

Published Date: October 19, 2022

CATEGORY: ECONOMY

சென்னை, அக்.19: 2022 -2023ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்காக ₹ 3795.72 கோடிக்கான துணை பட்ஜெட்டை சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் 2022 -2023ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதித்துறை அமைச்சர் பதவிகள் தியாகராஜன் பேசியதாவது:

2022-23ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடு மொத்தம் 3795.72 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழி செய்கின்றது. 2022-2023 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப்பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்ற பேரவையில் ஒப்புதலை பெறுவதற்கும், எதிர்பாராத செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடுசெய்வதும் இத்துணை மானிய கோரிக்கையின் நோக்கமாகும். போக்குவரத்து துறையில் சொத்துக்களை உருவாக்குவதற்கு மாநில போக்குவரத்து கழகங்களுக்கு பங்கு மூலதன நிதியாக ₹500 கோடி நிதியை அரசு அனுமதித்துள்ளது.

நகர்ப்புற பகுதிகளில் சாலையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துக்கு மானியத்தின் முதல் தவனையாக ₹550 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

சென்னை பெருநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் ஆகியவற்றிற்கு மாநில பேரிடர் தணிப்பு பிரிவின் கீழ் 373.50 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதலாக 134.22 கோடி அரசு அனுமதித்துள்ளது.

கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 7 பாசன கட்டமைப்புகளை சீரமைக்க 104.13 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

சென்னை வெளிவட்ட சாலை திட்ட பகுதி -1 திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவதற்கு கூடுதலாக 227.16 கோடி அரசு அனுமதித்துள்ளது.

2022- 23ம் கல்வியாண்டில் 28 சிறப்பு பள்ளிகளை நிறுவுவதற்கு 169.4 கோடி இந்த அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலை நிலுவைத் தொகை வழங்குவதற்காக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை முன்பணமாக 252.29 கோடி அரசு அனுமதித்துள்ளது.

திருவள்ளூர் குந்தம்பாக்கம் கிராமத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையத்தைக் கட்டுவதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் இருந்து 168 கோடி அரசு அனுமதித்துள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான 33.56 கோடி அரசு அனுமதித்துள்ளது.

உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு. 97.05 கோடி அரசு அனுமதித்துள்ளது.

Media: Dinakaran